சங்ககிரி அருகே பொதுமக்கள் புகாரையொட்டி பாதையில் கொட்டிய கற்களை அகற்றிய போலீசார்
சங்ககிரி அருகே பொதுமக்கள் புகாரையொட்டி பாதையில் கொட்டிய கற்களை போலீசார் அகற்றினர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே பவானி பிரிவு ரோடு சொட்டையன் காடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 52). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இதற்கிடையே சின்னா கவுண்டனூர், ராயலூர், ஜெ.ஜெ.நகர், சொட்டையன் காடு, புதுவளவு அருந்ததியர் தெரு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சொட்டையன்காடு வழியாக செல்லும் பாதையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சாலை வழியாக மேக்காடு பொதுமக்களுக்கு குழாய் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பழுதடைந்தது. அப்போது கவிதா தனது நிலத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாயை சரிசெய்யகூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் அவதியடைந்து வந்தனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பவானி பிரிவு ரோட்டில் இருந்து சொட்டையன் காடு வழியாக ஜெ.ஜெ.நகர் செல்லும் பாதை முழுவதும் கவிதா, அவருடைய மகன் கண்ணன் ஆகியோர் கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சங்ககிரி போலீஸ் நிலையம் சென்று அங்கிருந்த இன்ஸ்பெக்டர் தேவியிடம் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், ஸ்ரீராமன் உள்ளிட்ட போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் பிரபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கற்கள் போட்ட கவிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாதை முழுவதும் கொட்டப்பட்ட கற்களை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.