கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு
சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை போனது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் குறித்து விசாரணை நடத்தினர்.
நூல் வியாபாரி
சேலம் மரவனேரி 7-வது குறுக்கு தெரு சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 65). நூல் வியாபாரி. இவருடைய மனைவி மல்லிகா (62). கணவன், மனைவி இருவரும் கடந்த மாதம் 31-ந்தேதி இரவு சூரமங்கலத்தில் நடந்த உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு வந்தனர். பின்னர் மல்லிகா அணிந்து சென்ற நகைகளை கழற்றி, பீரோவின் அருகில் ஒரு பெட்டியில் வைத்தார்.
அன்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து மல்லிகா அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்கள்
இந்த நிலையில் கொள்ளை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த பகுதியில் சுற்றித்திரிவது பதிவாகி உள்ளன. அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, கொள்ளை நடந்த அன்று 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சுற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் தான் நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் அவர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். எனவே விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.