பா.ஜனதா- காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு


பா.ஜனதா- காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு 2-வது நாளாக போலீஸ் பாதுகாப்பு
x

நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு 2-வது நாளாக நேற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு 2-வது நாளாக நேற்றும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சாலை மறியல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதேபோல் குமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் அந்த சாலையில் அமைந்துள்ள பா.ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகம் முன்பு காங்கிரஸ் கொடியுடன் அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.

காங்கிரஸ்- பா.ஜனதா மோதல்

இந்த சத்தம் கேட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பா.ஜனதா நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியினரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார். அவர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

2-வது நாளாக பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மார்த்தாண்டம், குழித்துறை, மேல்புறம், ராஜாக்கமங்கலம், திருவட்டார், கன்னியாகுமரி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள பா.ஜனதா அலுவலகம், வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள விஜய்வசந்த் எம்.பி. அலுவலகம் ஆகியவற்றுக்கு நேற்று முன்தினத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று 2-வது நாளாகவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவில் மத்தியாஸ் வார்டு பகுதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கும், பால்பண்ணை சந்திப்பு பகுதியில உள்ள குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மாவட்டம் முழுவதும்...

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள காங்கிரஸ், பா.ஜனதா கட்சி அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி வீடு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வீடு மற்றும் தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story