மாமன்னன் வெளியான தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் மாமன்னன் வெளியான சினிமா தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாமன்னன் திரைப்படம்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் மாமன்னன். இந்த படம் நேற்று வெளியானது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 10 சினிமா தியேட்டர்களில் மாமன்னன் திரையிடப்பட்டது.
இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நகரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. மேலும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாமன்னன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் பாதுகாப்பு
இதனால் மாவட்டம் முழுவதும் மாமன்னன் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்படி 10 தியேட்டர்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் தியேட்டருக்கு உள்ளே தனிப்பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல் ரசிகர்கள் சோதனைக்கு பின்னரே தியேட்டர்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் ஒரு தியேட்டர் அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிகண்டபிரபு தலைமையில் பலர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல் சின்னாளப்பட்டியில் ஒரு தியேட்டர் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் பழனியில் ஆர்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதியில் உள்ள 2 தியேட்டர்களில் மாமன்னன் திரையிடப்பட்டது. அந்த தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.