பெண்ணாடத்தில் பெயிண்ட் குடோன், தங்கும் விடுதியில் திருட முயற்சி மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெண்ணாடத்தில் பெயிண்ட் குடோன், தங்கும் விடுதியில் திருட முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் சேட்டு முகமது (வயது 47). இவர் பழைய பேருந்து நிலையத்தின் அருகே எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். மேலும் இவரது கடைக்கு எதிரே பைப் மற்றும் பெயிண்டுகள் வைத்திருக்கும் 3 குடோன்களும் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், சேட்டு முகமது தனது கடை மற்றும் குடோனை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது குடோன்களின், ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்த அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு ஏட்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குடோன்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் சேட்டுமுகமது, கடை மற்றும் குடோன்களை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் குடோனில் பணம் இல்லாததால், அவர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் இதேபோல் அதே பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர் கடையின் குடோன் மற்றும் அதே பகுதியில் வளாகத்தில் 3 தங்கும் விடுதிகளிலும் மர்மநபர்கள் திருட முயன்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி திருட முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.