போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்குதல்: மருந்து கடை ஊழியருக்கு ரூ.5¾ லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு


போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்குதல்: மருந்து கடை ஊழியருக்கு ரூ.5¾ லட்சம் இழப்பீடு - மனித உரிமை ஆணையம் உத்தரவு
x

போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்கப்பட்ட மருந்து கடை ஊழியருக்கு ரூ.5¾ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

சென்னை

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நான் கோயம்பேட்டில் உள்ள மருந்து கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். கடந்த 13.8.2014 அன்று மருந்து கடையில் இருந்த என்னை போலீசார் அழைத்து சென்று மாயமான அ.தி.மு.க. பிரமுகர் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியபோதும் அதை கேட்காமல் 6 நாட்கள் சட்டவிரோதமாக போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி தாக்கினர். இதன்பின்பு பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். எனவே, சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், 'சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது மனுதாரரை போலீசார் சட்டவிரோதமாக போலீஸ் நிலையத்தில் அடைத்து வைத்து தாக்கியது தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இதில் தலா ரூ.1 லட்சத்தை வடபழனி உதவி போலீஸ் கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜ், ரேகா ஆகியோரிடம் இருந்தும், ரூ.75 ஆயிரத்தை சப்-இன்ஸ்பெக்டர் வில்சனிடம் இருந்தும், தலா ரூ.50 ஆயிரத்தை ஏட்டு தமிழ்வாணி, போலீஸ்காரர்கள் கண்ணன், அசோக், சரவணன் ஆகியோரிடம் இருந்தும் வசூலித்துக்கொள்ளலாம். போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் 8 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.


Next Story