போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்


போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 26 May 2023 11:51 PM IST (Updated: 27 May 2023 1:27 PM IST)
t-max-icont-min-icon

சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக மாற்றப்பட்டார். சாராயம் காய்ச்சுவதற்கு வெல்லம் பதுக்கி வைத்திருந்த 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

அதிரடி மாற்றம்

மதுராந்தகம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் இறந்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடியாக சாராய வேட்டை நடத்தி சாராய வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த தேவபிரசாத் என்பவர் பேரணாம்பட்டு பகுதியில் சாராயம் காய்ச்சும் வியாபாரிகளுக்கும், அதற்கு வெல்லம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர், தேவபிரசாத்தை வேலூர் தெற்கு போலீஸ் நிலைய குற்ற பிரிவுக்கு அதிரடியாக மாற்றம் செய்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

2 வியாபாரிகள் கைது

மேலும் மாவட்ட போலீஸ் சூப்ரண்டின் தனிப்படை போலீசார் பேரணாம்பட்டு பஜார் வீதியில் உள்ள பேரணாம்பட்டு பூந்தோட்ட வீதியை சேர்ந்த முகமது அனீஸ் என்பவருடைய வெல்ல மண்டி மற்றும் குடோனில் சோதனை நடத்தி அங்கு சாயாரம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் 1,500 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் பேரணாம்பட்டு டவுன் ஆச்சாரி வீதியில் கமலாபுரம் கிராமத்தை பழனி என்பவருடைய எண்ணெய் கடையில் சோதனையிட்டதில் கடையின் தரைத் தளத்தில் பதுக்கி வைத்திருந்த 1,200 கிலோ வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் முகமது அனீஸ், பழனி ஆகிய 2 பேரும் சாராய வியாபாரிகளுக்கு, சாராயம் காய்ச்சுவதற்கு வெல்லம் விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முகமது அனீஸ், பழனி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story