தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை
தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை
மன்னார்குடி அருகே தூக்குப்போட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் இந்த சோகம் நடந்துள்ளது.
போலீஸ்காரர் தற்கொலை
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தானமாரிமுத்து. இவரது மகன் பிரவீண் குமார்(வயது 31). இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் கடந்த 2 வருடங்களாக போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று காலை மன்னார்குடி அருகே நாலாநல்லூர் கிராமத்தில் வயல்வெளியில் உள்ள மரத்தில் பிரவீண்குமார் தூக்கில் பிணமாக தொங்கினார்.
காரணம் என்ன? போலீசார் விசாரணை
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீண்குமார் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீண் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில்...
வருகிற 28-ந் தேதி போலீஸ்காரர் பிரவீண் குமாருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீசார் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.