விவாகரத்து கேட்டு மனைவியுடன் போலீஸ்காரர் தகராறு; தடுத்த 2 பேருக்கு அரிவாள் வெட்டு
சங்கராபுரம் அருகே விவாகரத்து கேட்டு மனைவியுடன் போலீஸ்காரர் தகராறில் ஈடுபட்டார். இதை தடுத்த 2 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய போலீஸ்காரரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் யுவராஜ்(வயது 29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவி கல்கி (22). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
விவாகரத்து கேட்டு தகராறு
இதற்கிடையில் யுவராஜ் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண்ணை அவர் 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக யுவராஜ் கல்கியிடம் விவாகரத்து கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று கல்கி தனது வீட்டு எதிரில் உள்ள தாய் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு சென்ற யுவராஜ், நீ எப்படி அந்த பெண்ணிடம் செல்போனில் பேசுவாய் என்று கல்கியிடம் மீண்டும் விவாகரத்து கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யுவராஜ், கல்கியை அரிவாளால் வெட்ட முயன்றார்.
2 பேருக்கு அரிவாள் வெட்டு
இதை பார்த்த கல்கியின் அண்ணன் யுவராஜ்சர்மா (24), அதே பகுதியை சேர்ந்த முருகன் (27) ஆகியோரும் யுவராஜிடம் அடுத்தடுத்து தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களை யுவராஜ் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த யுவராஜ் சர்மா, முருகன் ஆகிய 2 பேரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் யுவராஜ் சர்மா மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் பற்றி அறிந்ததும் கல்கியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து யுவராஜை கைது செய்யக்கோரி சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் குறுக்கே கட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மஜோதி, லோகேஸ்வரன், ஜெயமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது யுவராஜை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதை ஏற்றதும், மறியலில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி கல்கி அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை தேடி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.