போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x

ஊட்டியில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சனை கொடுமையால் இறந்ததாக பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி, ஜூன்.9-

ஊட்டியில் போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சனை கொடுமையால் இறந்ததாக பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வினீத் பாலாஜி (வயது 29). இவர் ஊட்டி நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வினித் பாலாஜிக்கும், திண்டுக்கல் சீலப்பாடி என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்த கார்த்திகைவேல் என்பவரது மகள் முத்துப்பாண்டீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். தம்பதியினர் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் முத்துப்பாண்டீஸ்வரி காவலர் குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் ஊட்டி நகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துப்பாண்டீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சனை கொடுமை

இந்த நிலையில் முத்துப்பாண்டீஸ்வரியின் பெற்றோர், தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது மகளின் திருமணத்தின் போது வரதட்சணையாக 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டது. ஆனாலும் கூடுதலாக பணம் மற்றும் இருசக்கர வாகனம் வரதட்சணையாக வாங்கி வரவேண்டும் என்று கூறி எங்கள் மகளை கொடுமைப்படுத்தியுள்ளனர். எனவே எங்கள் மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஊட்டி நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முத்துப்பாண்டீஸ்வரிக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story