2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் இறந்த விவகாரம்: போலீஸ் ஏட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை


2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் இறந்த விவகாரம்: போலீஸ் ஏட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை
x

2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் இறந்த விவகாரத்தில், கோவில்பட்டியில் போலீஸ் ஏட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதல் பிரச்சினையில் அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-நள்ளி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவில் ஆண் ஒருவர், தண்டவாளத்தில் தலை வைத்து ரெயில் மோதி இறந்து கிடப்பதாக சாத்தூர் ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர், தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலீஸ் ஏட்டு

ரெயில் மோதி இறந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் கொக்கரங்கோட்டையைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (வயது 47) ஆவார். இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரெயில்வே போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

சொக்கலிங்க பாண்டியனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சொக்கலிங்க பாண்டியன் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

கள்ளக்காதல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொக்கலிங்க பாண்டியன் மதுரை ரெயில் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது அவருக்கும், அங்கு பணியாற்றிய சக பெண் போலீசான தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஜெயலட்சுமிக்கும் (37) இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

ஜெயலட்சுமியின் கணவர் சுப்புராஜ் பெயிண்டராக உள்ளார். இவர்களுக்கு காளிமுத்துராஜா (9) என்ற மகனும், வந்தனா (11) என்ற மகளும் இருந்தனர். பின்னர் ஜெயலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். தொடர்ந்து சொக்கலிங்க பாண்டியன், கள்ளக்காதலி ஜெயலட்சுமியுடன் சேர்ந்து தனியாக வாடகை வீடு எடுத்து கடந்த 6 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர்.

மற்றொரு பெண்ணுடன் தொடர்பு

மதுரையில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு செங்கோட்டைக்கு சென்ற போலீஸ் ஏட்டு சொக்கலிங்க பாண்டியனுக்கும், செங்கோட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த ஜெயலட்சுமி, செங்கோட்டை பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சொக்கலிங்க பாண்டியனுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார். மேலும் சொக்கலிங்க பாண்டியனையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.

கைகலப்பு

இதற்கிடையே, செங்கோட்டை பெண்ணிடம் சொக்கலிங்க பாண்டியனுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு ஜெயலட்சுமி பேசியதை, அந்த பெண் ஆடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டார். பின்னர் அந்த ஆடியோவை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விடுவதாக செங்கோட்டை பெண், ஜெயலட்சுமியிடம் கூறியதாக தெரிகிறது.

நேற்று முன்தினம் சொக்கலிங்கபாண்டியனும் மதுரையில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுக்கு சென்று, அவரிடம் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி மாலையில் தனது 2 குழந்தைகளுடன் மதுரை சமயநல்லூர் தேனூர் மதுபானக்கடை எதிரில் உள்ள தண்டவாளத்துக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் ஜெயலட்சுமி 2 குழந்தைகளுடன் பாய்ந்தார். இதில் 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.

தண்டவாளத்தில் தலை வைத்து...

ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டது பற்றி அறிந்த சொக்கலிங்கபாண்டியன் இரவில் காரில் புறப்பட்டு சென்றார். இரவு 11 மணியளவில் கோவில்பட்டி-நள்ளி இடையே உள்ள தண்டவாள பகுதிக்கு சென்ற அவர், சற்று தொலைவில் காரை நிறுத்தி விட்டு, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொண்டார். அப்போது அந்த வழியாக சென்ற திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில், சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டாகி உயிரிழந்தார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கள்ளக்காதலி குழந்தைகளுடன் தற்கொலை செய்ததை அறிந்து விரக்தியாலும், போலீஸ் விசாரணைக்கு அஞ்சியதாலும் ஏட்டு சொக்கலிங்கபாண்டியன் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் இறந்த விவகாரத்தில் கோவில்பட்டியில் போலீஸ் ஏட்டு தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணனுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பிய ஏட்டு

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக சொக்கலிங்க பாண்டியன், 'நான் சாகப்போகிறேன்' என்று கோவில்பட்டியில் உள்ள தனது அண்ணனும், முன்னாள் ராணுவ வீரருமான சச்சிதானந்தமின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். பின்னர் அவர், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார்.


Next Story