போலந்து நாட்டை சேர்ந்தவர், 7 மாதங்களுக்கு பிறகு விடுதலை
இலங்கையில் இருந்து படகில் கள்ளத்தனமாக வந்ததால் கைது செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்தவரை 7 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்து வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டது.
வேதாரண்யம்:
இலங்கையில் இருந்து படகில் கள்ளத்தனமாக வந்ததால் கைது செய்யப்பட்ட போலந்து நாட்டை சேர்ந்தவரை 7 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்து வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டது.
கரை ஒதுங்கிய ரப்பர் படகு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை முனங்காட்டு பகுதியில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், அந்த படகை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ஆறுகாட்டுத்துறையில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலந்து நாட்டுக்காரர்
விசாரணையில் அவர், போலந்து நாட்டை சேர்ந்த மேத்தீஸ்வாப்(வயது 40) என்பது தெரிய வந்தது. மேலும் அவர், போலந்து நாட்டில் இருந்து 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையை சுற்றிப்பார்க்க வந்துள்ளார்.
அப்போது இலங்கையில் குடிபோதையில் ஏற்பட்ட அடிதடி வழக்கில் சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் அபராதம் கட்டி விட்டு 3 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவர் மீது உள்ள வழக்கை முடித்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என இலங்கை அரசு மேத்தீஸ்வாப் பாஸ்போர்ட்டை முடக்கியது.
படகு மூலம் வந்தார்
இதனைத்தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கத்தால் இலங்கையிலேயே 2 ஆண்டுகள் சுற்றித்திரிந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வந்து அங்கிருந்து டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் போலந்து நாட்டுக்கு சென்று விட மேத்தீஸ்வாப் முடிவு செய்தார்.
இதற்காக ரூ.1 லட்சத்துக்கு ரப்பர் படகு வாங்கி அதில் யாழ்பாணத்தில் இருந்து கோடியக்கரைக்கு வந்துள்ளார். படகு கரை வந்து சேர்ந்ததும் எங்கு செல்வது என்று தெரியாமல் கோடியக்கரையில் சுற்றித்திரிந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.
கைது-சிறையில் அடைப்பு
இதனைத்தொடர்ந்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்ததாக வழக்குப்பதிவு செய்து மேத்தீஸ்வாப்பை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு ெதாடர்பாக நேற்று மேத்தீஸ்வாப் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
7 மாதங்களுக்கு பிறகு விடுதலை
இதையடுத்து அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதியும், அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தும் மேத்தீஸ்வாப்பை விடுதலை செய்து நீதிபதி சன்மிகா உத்தரவிட்டார்.
7 மாதங்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட மேத்தீஸ்வாப்பை, மும்பையில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்க போலீசார் மும்பைக்கு அழைத்து சென்றனர்.