இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிந்து போஸ்டர் ஒட்டியதாக கைதான இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

அம்பேத்கர் படத்திற்கு காவி உடை அணிந்து போஸ்டர் ஒட்டியதாக கைதான இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

நாடு முழுவதும் கடந்த 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர் முழுவதும் அம்பேத்கர் உருவ படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசி, குங்குமம் வைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக கும்பகோணம் பிள்ளையார ்கோவில் தெருவை சேர்ந்த இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குருமூர்த்தி(வயது 42) என்பவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

பின்னர் அவர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் குருமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார். அதன்படி வழக்கு ஆவணங்களை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து குருமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இதையடுத்து கும்பகோணம் கிளை சிறையில் இருந்த குருமூர்த்தியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கான ஆணையை சிறை அதிகாரிகளிடம் போலீசார் சமர்ப்பித்தனர்.


Next Story