காரை விட்டு மோதி ஓட, ஓட விரட்டி வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை


காரை விட்டு மோதி ஓட, ஓட விரட்டி வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை
x

கொரடாச்சேரி அருகே காரை விட்டு மோதி ஓட, ஓட, விரட்டி வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர்

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே காரை விட்டு மோதி ஓட, ஓட, விரட்டி வளரும் தமிழகம் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வளரும் தமிழகம் கட்சி பிரமுகர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 34). இவர், வளரும் தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்தார்.இவர் மீது பல்வேறு கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் திருவாரூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக ராஜ்குமார் தனது வக்கீல் உள்பட 6 பேருடன் நேற்று காலை கோர்ட்டுக்கு வந்தார்.

காரை விட்டு மோதினர்

கோர்ட்டில் ஆஜராகி விட்டு தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தன்னுடைய வக்கீலை கொரடாச்சேரி அருகில் உள்ள கமலாபுரத்தில் விடுவதற்காக காரில் கமலாபுரம் நோக்கி சென்றார்.கமலாபுரம் கடைவீதி அருகே சென்றபோது மன்னார்குடியில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகத்தில் வந்த ஒரு சொகுசு கார், ராஜ்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் ராஜ்குமார் சென்ற காரின் பின்பக்க கதவு 'லாக்' ஆனது. இதனால் காரின் பின்பகுதியில் அமர்ந்து இருந்தவர்களால் வெளியில் வர முடியவில்லை.

ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை

அந்த நேரத்தில் ராஜ்குமாரின் கார் மீது மோதிய சொகுசு காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ராஜ்குமாரை நோக்கி வந்தனர்.முதலில் இதை விபத்தாக எண்ணிய ராஜ்குமார், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து சுதாரித்தார். அந்த மர்ம கும்பல் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த அவர், அந்த கும்பலிடம் இருந்து உயிர் தப்புவதற்காக காரின் முன்பகுதியில் இருந்து காரை விட்டு இறங்கி ஒரு வீட்டிற்குள் நுழைவதற்காக ஓடினார்.அப்போது அவரை துரத்திச்சென்ற மர்ம கும்பல் ஓட, ஓட விரட்டிச்சென்று ராஜ்குமாரின் கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பொதுமக்கள் அதிர்ச்சி

பட்டப்பகலில், எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.தங்கள் கண் முன்னே ஒருவர் வெட்டி சாய்க்கப்படுவதை பார்த்த பொதுமக்கள் ஒன்றும் செய்ய முடியாமல் நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்தனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இந்த படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.பின்னர் படுகொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் உடலை திருவாரூர் மேற்கு போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பழிக்குப்பழியாக நடந்த கொலையா?

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நீடாமங்கலம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பழிக்குப்பழி காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளதா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பரபரப்பு

பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் ெ்பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story