தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்தால் வரவேற்போம்
தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்தால் வரவேற்போம் என்று மன்னார்குடியில் கே.எஸ். அழகிரி கூறினார்.
மன்னார்குடி, ஆக.23-
தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் வந்தால் வரவேற்போம் என்று மன்னார்குடியில் கே.எஸ். அழகிரி கூறினார்.
ராகுல்காந்தி நடைபயணம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவதுஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் 5 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம்.
வரவேற்போம்
காங்கிரஸ் கட்சியுடன் டி.டி.வி.தினகரன் கூட்டணி அமைப்பது குறித்து எங்களுடன் இதுவரை பேசவில்லை. அப்படி பேசினால் தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக கார்த்திக் சிதம்பரம் வந்தால் அதை வரவேற்போம். அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும்.தமிழகத்தில் கவர்னர் ரவி, போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். கூட்டாட்சி முறையில் செயல்படும் அரசாங்கத்தில் தமிழக கவர்னர் ரவி தனியாக கருத்தரங்கம் நடத்தி தனது எல்லையை மீறக்கூடாது.
காலூன்ற முடியாது
பொருளாதார கொள்கை குறித்த புரிதல் இல்லாததால் பிரதமர் மோடி அரிசி, கோதுமைக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்திருக்கிறார். இதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது ஒரு விவாத பொருள் அல்ல. தமிழகத்தில் பா.ஜனதாவால் காலூன்ற முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மன்னார்குடி நகர தலைவர்ஆர்.கனகவேல், மாவட்ட சேவாதள தலைவர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.