நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்கலாம்
நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றிணைந்து சந்திக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
பேட்டி
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து ஜெயலலிதா ஆட்சி அமைக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். அதைத்தான் நானும் பழைய பகை, கசப்புணர்வுகளை மறந்து ஜெயலலிதா மற்றும் தலைவர்கள் காட்டிய லட்சிய பாதையில் பயணிக்க வேண்டும். மக்கள் விரோத தி.மு.க.வை ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்ற எது சரியான வழியோ அதில் செயல்பட வேண்டும். நேற்று வரை நடந்ததை மறந்து இனி எல்லாம் நல்லதாக நடக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட வேண்டும் என்ற கருத்தை நான் கூறினேன்.
ஒன்றிணைந்து செயல்படுவோம்
நாங்கள், அவர்களுடன் சேர வேண்டும். அவர்கள், எங்களுடன் சேர வேண்டும் என்று அல்ல. ஓ.பன்னீர்செல்வம் கூறியதுபோல, ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றால், ஒரே கட்சியில் சேர வேண்டும் என்று அல்ல. ஒரு வீட்டில் இருந்த ஒரு தாய் மக்கள், சண்டை வந்து பிரிந்தோ, வெளியேற்றப்பட்டோ, அல்லது வெளியேறியோ, தனித்தனியாக வீடுகளில் இருக்கிறோம்.பஞ்ச பாண்டவர்கள் போல இணைந்து, துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து போராடுவோம். யாரும், யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை. ஒரு தாய் மக்கள் பிரிந்துள்ளோம். போருக்கு ஒன்றாக செல்லலாம் என்று சொல்கிறோம்.
ஏற்கவில்லை
கடந்த தேர்தலில் கூட இணைந்து செயல்படுவோம் என்று நாங்கள் நட்புக்கரம் நீட்டினோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழையதையே நினைத்துக்கொண்டு இருக்க கூடாது.நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம். ஜெயக்குமார், தொடர்ந்து அரசியல் பற்றி தெரியாமல் பேசுகிறார். அவர் தெரிந்து பேசுகிறாரா? தெரியாமல் பேசுகிறாரா? என தெரியவில்லை.
மேகதாதுவில் அணை
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு கொடுத்து தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். விமான நிலையம் வருவது வளர்ச்சிக்குத்தான். ஆனால், அதே வேளையில் விமான நிலையத்திற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களது கோரிக்கையை கேட்க வேண்டும்.மேகதாதுவில் அணை வந்தால் சோமாலியாவை போல் தமிழகம் மாறிவிடும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் மொய் விருந்து என்பது பாரம்பரியமாக நடக்க கூடியது. பேராவூரணியில், தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து என்பதால் பேசப்படுகிறது. பாரம்பரியமாக நடக்கக்கூடிய மொய் விருந்து குறித்து எதுவும் தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்.இவ்வாறு அவர்கூறினார்.