விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு 6-ந் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்


விழுப்புரம் மாவட்டத்தில்  வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு  6-ந் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடப்பட்டது. 6-ந் தேதிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்


இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பான) வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மோகன் நேற்று வெளியிட்டார்.

இந்த பட்டியலில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளும், மயிலம் தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளும், திண்டிவனம் (தனி) 266 வாக்குச்சாவடிகளும், வானூர் (தனி) 277 வாக்குச்சாவடிகளும், விழுப்புரம் 289 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி 275 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் 286 வாக்குச்சாவடிகளும் என சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 1,962 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் வாக்குச்சாவடிகளின் அமைவிடம் குறித்து ஏதேனும் ஆட்சேபனை மற்றும் வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் வருகிற 6-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அல்லது திண்டிவனம் சப்-கலெக்டர், விழுப்புரம், திருக்கோவிலூர் கோட்டாட்சியர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்மாறு கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிசந்திரன், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Next Story