புதர்மண்டி கிடக்கும் குளங்களை தூர்வார வேண்டும்
கொள்ளிடம் பகுதிகளில் புதர்மண்டி கிடக்கும் குளங்களை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதிகளில் புதர்மண்டி கிடக்கும் குளங்களை தூர்வார வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பு...
கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்துக்கும் 4 முதல் 8 அல்லது 10 எண்ணிக்கையில் வரை குளங்கள் உள்ளன. இந்த அனைத்து குளங்களும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்து வந்தன. ஒவ்வொரு கிராம மக்களும் தங்களது தேவைகளுக்கு குளங்களுக்கு சென்று நீராடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் எளிதில் சென்று சேரும் வகையில் வாய்க்கால் வசதி இருந்து வந்தன.
இதேபோல் குளத்தில் தேங்கும் தண்ணீரை குறிப்பிட்ட நாள் கழித்து வெளியேற்றும் வகையில் வடிகால் வாய்க்கால்களும் அமைக்கப்பட்டிருந்தன. கிராமங்களில் உள்ள குளங்கள் சுத்தம் சுகாதாரத்தோடு பேணி பாதுகாக்கப்பட்டு வந்தன. இத்தகைய குளங்கள் காலப்போக்கில் வடிகால்வசதி மற்றும் தண்ணீர் குளங்களுக்குள் செல்லும் வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் குளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
குட்டைகளாக மாறியது
ஒவ்வொரு குளமும் ஒரு ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரை பரப்பளவு கொண்டதாக அமைந்திருந்தன. இந்த குளங்கள் பராமரிக்கப்பட்டு வந்தபோது நிலத்தடி நீர் நன்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனால் நிலத்தடி நீர் போதிய அளவுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் படிப்படியாக குளங்கள் குட்டைகளாக மாறி உள்ளன. பல குளங்களில் இன்று கட்டிடங்களும் குடியிருப்புகளும் காணப்படுகின்றன.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறையில் ஒவ்வொரு ஊராட்சி மன்ற கட்டுப்பாட்டிலும் குளங்கள் இருந்து வருகின்றன. ஊராட்சி குளங்கள் மூலம் குத்தகையிட்டு அதன் மூலம் பெறப்படும் தொகை ஊராட்சியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது பல குளங்கள் மறைந்து விட்டதால் குளங்கள் மூலம் வருடந்தோறும் ஊராட்சிகளுக்கு வரவேண்டிய வரவு இனங்கள் மிகவும் குறைந்து போய் உள்ளன.
தூர்வார வேண்டும்
இது குறித்து கொள்ளிடம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொள்ளிடம் அருகே எடமணல், மாதிரவேளூர், குன்னம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, புதுப்பட்டினம், அளக்குடி, ஆச்சாள்புரம், பழையபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குளங்கள் இதுவரை பயன்படுத்த முடியாத நிலையில் புதர் மண்டியும், தண்ணீர் குளத்துக்குள் வந்து செல்ல வசதி வாய்ப்பு இன்றியும் இருந்து வருகிறது.
பல குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே கொள்ளிடம் பகுதியில் புதர் மண்டி எந்த பயனும் இல்லாத குளங்களை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அந்தந்த குளங்களின் இயற்கையான அகலம் நீளம் ஆகியவற்றை அளவீடு செய்து தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் குளத்துக்கு வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.