பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப்பணமா?
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்துவருகிறது.
திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.
பொங்கல் பரிசு
அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்6னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரைக் கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது.
2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது.
ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இன்ப அதிர்ச்சி
2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.
2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.
கசப்பான அனுபவம்
இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் மனநிலை
அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா?, ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.
இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-
பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம்.
எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.
இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது. எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
கோட்டூரை சேர்ந்த விவசாயி ராஜகோபால்:-
தர்மபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன் கரும்பும் வழங்கப்பட்டால் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க விவசாய விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு பணத்துக்கு பதிலாக, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்பத் தலைவிகளிடம் வழங்க வேண்டும்
சென்னம்பட்டியை சேர்ந்த தொழில் அதிபர் சுரேஷ்:-
நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருளாதார வசதி கொண்டவர்களாக இல்லை. எனவே இத்தகைய ஏழை, எளியோரை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளியோருக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினாலும் வரவேற்கத்தக்கது. பொங்கலுக்கு ரொக்க தொகை வழங்கினால் அதை குடும்பத் தலைவிகளிடம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரமான பொருட்கள்
தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலாஜி:-
அரசு வழங்கும் இலவச திட்டங்கள் பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தமிழக அரசின் பரிசு தொகுப்பு பொருட்கள் பயன் உள்ளதாக இருக்கின்றன. எனவே பொங்கல் பரிசு தொகுப்பு கொடுத்தால் அதில் உள்ள பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொங்கல் பரிசை ரொக்க தொகையாக கொடுத்தாலும் வரவேற்கத்தக்கது தான். இரண்டில் ஏதாவது ஒன்று வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தால் ரொக்க தொகையாக வழங்கினால் பொதுமக்கள் பொங்கல் பொருட்கள் வாங்கி கொள்வதோடு, தங்கள் அத்தியாவசிய தேவைக்கு அந்த தொகையை பயன்படுத்தி கொள்வார்கள்.
இரண்டையும் வழங்கலாம்
பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஜானகி:-
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் அரசு பொங்கல் பரிசு தொகுப்பை எப்படி வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. எனவே பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் ஆகிய இரண்டையும் வழங்கினால் ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.