பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.21 லட்சம் பொங்கல் போனஸ் தொகை
பூம்புகாரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.21 லட்சம் பொங்கல் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம் காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்) பால் உற்பத்தியாளர் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் பேரவை கூட்டம் மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விரிவாக்க அலுவலர் யமுனா மகேஸ்வரி, மயிலாடுதுறை சரக முதுநிலை ஆய்வாளர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் அகோரம் வரவேற்றார். இதில் திருவாரூர் துணை பதிவாளர் (பால் வளம்) விஜயலட்சுமி, தஞ்சை ஆவின் பொது மேலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு 837 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 21 லட்சம் போனஸ் தொகைக்கான ஆணைகளை வழங்கினர். இதில் ஆவின் உதவி மேலாளர் மாதவ குமார், வைத்தீஸ்வரன் கோவில் பால் கூட்டுறவு சங்க பொறுப்பாளர் இந்துஜி, பூம்புகார் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க காசாளர் ரவி நன்றி கூறினார். இதில் திரளான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.