தோடர் இன மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா


தோடர் இன மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே தோடர் இன மக்கள் பொங்கல் விழா கொண்டாடினர். அவர்கள் பாரம்பரிய நடனம் ஆடி அசத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே தோடர் இன மக்கள் பொங்கல் விழா கொண்டாடினர். அவர்கள் பாரம்பரிய நடனம் ஆடி அசத்தினர்.

பொங்கல் விழா

கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் களை கட்டி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் வெவ்வேறு பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று ஊட்டி அருகே உள்ள பகல்கோடு மந்து, சூட்டிங் மட்டம் சுற்றுலா தலத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் தோடர் இன மக்கள் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

பழங்குடியினரின் நடனம்

அங்கு புதிய மண்பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டு பொங்கலை கொண்டாடினார்கள். தொடர்ந்து தோடர் இன மக்களின் பாரம்பரிய முறைபடி பூஜைகள் செய்து, கடவுளுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். பின்னர் அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

தமிழக சுற்றுலாத்துறை சார்பில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா நடந்தது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அம்ரித் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பரதநாட்டியம் மற்றும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதனால் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நடனத்தை கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

போலீசாருடன் இணைந்து நடனம்

இதேபோல் ஊட்டி ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது. இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் விழா மைதானத்திற்கு வந்தபோது, போலீசாருடன் இணைந்து நடனம் ஆடியபடி மேடைக்கு வந்ததால் அனைவரும் உற்சாகமடைந்தனர்.

விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உள்பட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ேபாலீசார் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். தொடர்ந்து போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட கிராம பகுதிகளில் பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி வெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களது காளைகளின் கொம்புகளுக்கு வர்ணம் திட்டி நேற்று மாட்டுப்பொங்கலையும் சிறப்பாக கொண்டாடினர். அப்போது சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து படையல் வைத்தனர்.


Next Story