நெல்லை சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் விழாவை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மாணவ-மாணவிகள்
நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் விழாவை மாணவ-மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அப்போது அவர்கள் பாரம்பரிய உடையில் வந்து அசத்தினர்.
நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் விழாவை மாணவ-மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். அப்போது அவர்கள் பாரம்பரிய உடையில் வந்து அசத்தினர்.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சாதி, மதங்களை கடந்து அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும், உழைப்பை போற்றும் பண்டிகையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் இளைஞர்களுக்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளில் இ்ப்போதே கொண்டாட்டம் களை கட்டி வருகிறது.
பாரம்பரிய போட்டிகள்
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் மற்றும் சித்தர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதனை கல்லூரி முதல்வர் சாந்தமரியாள் தொடங்கி வைத்தார். கடந்த 2 நாட்களாக பல்லாங்குழி உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடினர். இதேபோல் கேரம்போர்டு, இறகுப்பந்து, கைப்பந்து, கைகளில் மெகந்தி வரைதல், மாறுவேட போட்டி, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன.
மாணவிகளுக்கு காகித அலங்கார போட்டியும் நடந்தது. இதில் ஒரு குழுவில் 3 பேர் வீதம் மொத்தம் 12 குழுக்கள் இடம்பெற்றன. இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள் காகிதங்களை கொண்டு விதவிதமான ஆடைகளை வடிவமைத்து அணிந்து வந்து போட்டியில் பங்கேற்றனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் காய்கனிகளில் கலைநயம் மிக்க பொருட்களை தயாரித்தல் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.
மாணவிகள் நடனம்
விழாவின் இறுதி நாளான நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக கல்லூரி முழுவதும் தோரணங்கள் கட்டி, வண்ண கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மாணவிகள் பாரம்பரிய உடையான சேலை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் வந்திருந்தனர். பேராசிரியர்கள் பட்டு வேட்டியும், பேராசிரியைகள் பட்டு சேலையும் அணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.
மண்பானையில் மாணவிகள் பொங்கலிட்டனர். பானையில் பொங்கல் பொங்கி வழிந்தபோது, அங்கு கூடியிருந்த சக மாணவிகள் 'பொங்கலோ பொங்கல்... பொங்கலோ பொங்கல்...' என்று குரல் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். மேலும் மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசைக்கப்பட்டது. அப்போது அந்த தாளத்துக்கு ஏற்ப மாணவ-மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். மொத்தத்தில் தோரண அலங்காரம், மாணவ-மாணவிகளின் ஆட்டம் பாட்டம் என்று கல்லூரி வளாகமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.