கடலூர் மாவட்டத்தில்7¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணிகலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் 7¾ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் பீச்ரோட்டில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கி, பொங்கல் பரிசு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார். மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ரூ.85¾ கோடி ஒதுக்கீடு
இதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், மாவட்டத்தில் 7 லட்சத்து 73 ஆயிரத்து 601 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 426 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 7 லட்சத்து 74 ஆயிரத்து 27 பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக கடலூர் மாவட்டத்திற்கு ரூ.85 கோடியே 72 லட்சத்து 12 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பு 12-ந் தேதி வரை (அதாவது நாளை மறுநாள்) மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும். இதில் பெற தவறியவர்களுக்கு 13-ந் தேதி பொங்கல் பரிசு வழங்கப்படும். எனவே பொதுமக்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை சிரமமின்றி எளிதாக பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரொருவர் வந்தாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.
109 அலுவலர்கள் மூலம் கண்காணிப்பு
மேலும் மாவட்டத்தில் பொங்கல் பரிசு முறையாக வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வட்ட அளவில் 10 துணை ஆட்சியர்களும், 13 தாசில்தார்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு 39 துணை தாசில்தார்கள், 15 கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் 32 வருவாய் ஆய்வாளர்கள் என மொத்தம் 109 அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரசன்னா, இளையராஜா, சுபாஷினிராஜா, அருள்பாபு, ஹேமலதா, செந்தில்குமாரி இளந்திரையன், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் ராஜேந்திரன், துரைசாமி, உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை பதிவாளர் அன்பரசு நன்றி கூறினார்.
பொங்கல் பரிசு வழங்குவது நிறுத்தம்
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சுமார் 2,200 ரேஷன் கடைகள் மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்றது. இதற்காக பொதுமக்கள் நேற்று காலை முதல் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு வாங்கிச் சென்றனர். இதில் சில கடைகளில் பி.ஓ.எஸ். எந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்ததும், அவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு தொடர்ந்து பொங்கல் பரிசு வழங்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி அந்த கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் பணி மீண்டும் தொடங்கி நடந்தது. இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, நெய்வேலி, பெண்ணாடம், புதுப்பேட்டை, புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் பணி நடந்தது.