2.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
நாகை மாவட்டத்தில் 2.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
சிக்கல்:
நாகை மாவட்டத்தில் 2.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு
நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ். தலைமை தாங்கினார்.தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் நாகை மண்டல இணைப்பதிவாளர் அருளரசு வரவேற்றார்.குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
2.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்
ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில், மக்களை தேடி எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
நாகை மாவட்டத்தில் 367 ேரஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 2 லட்சத்து 17 ஆயிரத்து 496 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் என்ற முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
13-ந்தேதி வரை வழங்கப்படும்
வருகிற 13-ந்தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட வழங்கல் அலுவலர் தெய்வநாயகி கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் நாசர், பன்னீர் செல்வம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அனுசியா, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி தலைவர் கோமதி, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.