ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; கலெக்டர் விஷ்ணு வழங்கினார்


ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு; கலெக்டர் விஷ்ணு வழங்கினார்
x

நெல்லையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பணம், முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

திருநெல்வேலி

நெல்லையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கப்பணம், முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தடையில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததுடன் கூட்ட நெரிசலை தவிர்க்க தெரு வாரியாக, வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 87 ஆயிரத்து 555 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

கலெக்டர் வழங்கினார்

பாளையங்கோட்டை திருநகரில் உள்ள ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

13-ந்தேதி பணி நாள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 87 ஆயிரத்து 555 ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.54 கோடி மதிப்பில் ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள யாரேனும் ஒருவர் இதனை பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்டத்தில் உள்ள 796 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி உள்ளது. பரிசு தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே வழங்க வேண்டும். இதற்காக வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படும்.

கண்காணிப்பு குழு

இந்த பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு உதவி கலெக்டர் நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு குறுவட்டத்திற்கும் தாசில்தார் நிலையில் நடமாடும் கண்காணிப்புக்குழு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டுமானால் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை 9342471314, நெல்லை தாலுகா கட்டுப்பாட்டு அறை 9445000380, பாளையங்கோட்டை 9445000381, அம்பை 9445000386, நாங்குநேரி 9445000387, ராதாபுரம் 9445000388, சேரன்மாதேவி 9445796459, மானூர் 9445796458, திசையன்விளை 9499937025 மற்றும் 1967, 18004255901 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுபாஷினி, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாஷிலா, கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், நித்தியபாலையா, மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தச்சநல்லூர்

தச்சநல்லூர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ வழங்கி தொடங்கி வைத்தார். தச்சை மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, மாநகராட்சி கவுன்சிலர்கள் கோகுலவாணி சுரேஷ், டாக்டர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story