சேலம் மாவட்டத்தில் 10.74 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்


சேலம் மாவட்டத்தில் 10.74 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
x

சேலம் மாவட்டத்தில் 10.74 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

சேலம்

பொங்கல் பரிசு தொகுப்பு

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் கரும்பு ஒன்று ஆகியவை வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி எம்.டி.எஸ்.நகரில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.

ரூ.118.94 கோடி நிதி

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 73 ஆயிரத்து 514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10 லட்சத்து 74 ஆயிரத்து 453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதற்காக சேலம் மாவட்டத்திற்கு ரூ.118.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு நகர்புறப்பகுதிகளில் தினமும் 350 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கிராமப்புற பகுதிகளில் தினமும் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கன்னங்குறிச்சி

இதைத்தொடர்ந்து கன்னங்குறிச்சி ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டல குழுத்தலைவர் எஸ்.உமாராணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மீராபாய், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிங்காரம், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) துரைமுருகன், சேலம் சரக துணைப்பதிவாளர் முத்துவிஜயா, தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.


Next Story