பொங்கல் பொருட்கள் விற்பனை படுஜோர்


பொங்கல் பொருட்கள் விற்பனை படுஜோர்
x

பொங்கல் பொருட்கள் இறுதி கட்ட விற்பனை நேற்று அமோகமாக நடந்தது. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில், ஜன.15-

பொங்கல் பொருட்கள் இறுதி கட்ட விற்பனை நேற்று அமோகமாக நடந்தது. இதனால் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இன்று பொங்கல் பண்டிகை

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நமது முன்னோர்கள் பழமொழி. தமிழகத்தில் தை மாதம் முதல் நாளை அறுவடைத் திருநாளாகவும், பொங்கல் திருநாளாகவும் ஆண்டாண்டு காலமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புதுமணத்தம்பதிகள் முதல் பொங்கல் திருநாளை தலைப்பொங்கலாக கொண்டாடுவார்கள்.

இதையொட்டி பொங்கலையொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி, ஒரு முழுக்கரும்பு, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்பட்டது.

வியாபாரம் அமோகம்

மேலும் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த சில நாட்களாக மக்கள் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டனர். பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று கடைவீதிகளில் குவிந்தனர். இதனால் இறுதி கட்ட விற்பனை அமோகமாக இருந்தது.

நாகர்கோவில் நகரில் வடசேரியில் உள்ள கனகமூலம் சந்தை, சந்தையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள தற்காலிக கடைகள், வடசேரி பெரிய ராசிங்கன் தெரு, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் மற்றும் சந்தையின் வெளிப்பகுதி, வடிவீஸ்வரம் பெரிய தெருவில் அமைந்துள்ள தற்காலிக கடைகள், கோட்டார் கூழக்கடை பஜார் மற்றும் சந்தை ஆகியவற்றில் பொங்கல் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

மக்கள் கூட்டம்

இங்கு பொங்கல் பண்டிகைக்கு தேவையான காய்கறிகள், கிழங்கு வகைகள், பழவகைகள், புது மண் பானை, வண்ண மண் பானைகள், செம்பு பானை, கரும்பு, மஞ்சள்குலை, பொங்கல் பூ, பனை ஓலை, வண்ண கோலப்பொடிகள் விற்பனை ஜோராக நடந்தது. ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தேவையான பொங்கல் பொருட்களை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.

இதுதவிர பாத்திரங்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றிலும் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

இதனால் நாகர்கோவில் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. இதனால் வாகன நெருக்கடி நகரில் அதிகமாக இருந்தது. போலீசார் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சந்தைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

பிடிகிழங்கு விலை அதிகரிப்பு

காய்கறிகளைப் பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில காய்கறிகளான வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்றவை விலை உயர்ந்து காணப்படுகிறது. வாழைக்குலைகள் வரத்து குறைவாக இருப்பதால் வாழைப்பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. கிழங்கு வகைகளைப் பொறுத்தவரையில் கூவைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, காய்ச்சி கிழங்கு, சிறு கிழங்கு போன்றவை தலா ஒரு கிலோ ரூ.60 முதல் ரு.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

பிடிகிழங்கு வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.120-க்கும் மற்றும் சீனிக்கிழங்கு ஒரு கிலோ ரூ.30-க்கும் விற்பனையானது.

பனங்கிழங்கு (25 எண்ணம்) ஒரு கட்டு ரூ.40-க்கும், மஞ்சள் குலைகள் தரத்துக்கேற்ப ரூ.30 முதல் ரூ.50 வரையும், கரும்பு (15 எண்ணம்) ஒரு கட்டு தரத்துக்கேற்ப ரூ.300 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது.

மண்பானைகள் விற்பனை

மண் பானைகளைப் பொறுத்தவரையில் சாதாரண பானைகள் அளவுக்கேற்ப ரூ.60 முதல் ரூ.100 வரையும், வண்ணம் பூசப்பட்ட மண் பானைகள் அளவுக்கேற்ப ரூ.200 முதல் ரூ.280 வரை விற்பனையானது.

செம்பு பானைகளைப் பொறுத்தவரையில் எடைக்கு தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தார்கள். கோலப்பொடிகள் 10 பாக்கெட்டுகள் ரூ.60-க்கும், பெரிய பாக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.15-க்கும், 3 சிறிய பாக்கெட்டுகள் ரூ.10-க்கும் விற்பனையானது.

இதேபோல் பூக்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. சில பூக்களுக்கு நேற்று முன்தினத்தைவிட நேற்று விலை அதிகரித்து இருந்தது. அதாவது நேற்று முன்தினம் ரூ.1,900-க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று 2,600 ஆக உயர்ந்திருந்தது. ரூ.1800-க்கு விற்பனையான முல்லைப்பூ நேற்று ரூ.2500 ஆகவும், ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 எண்ணம் கொண்ட தாமரைப்பூ நேற்று ரூ.2 ஆயிரமாகவும் உயர்ந்திருந்தது.


Next Story