அனைத்து ஊராட்சிகளிலும் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்


அனைத்து ஊராட்சிகளிலும் பொங்கல் விழா கொண்டாட வேண்டும்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொங்கல் கொண்டாட வேண்டும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் விழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட வேண்டும். அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் இதனை பின்பற்ற வேண்டும். இதில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரிதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும்.

ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், அனைத்து தெருக்கள் மற்றும் அனைத்து கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். கோலம், ரங்கோலி, விவாத மேடை, பேச்சுப்போட்டி, குழுபாட்டு, தெருக்கூத்து, நாடகம் நடத்திட வேண்டும்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுக்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குபவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் அனைவரும் பொது இடத்தில் ஒன்று கூடி தங்களுக்குள் சமத்துவ உறுதி மொழியினை எடுத்துக் கொள்ள வேண்டும். சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து சுய உதவிக் குழு உறுப்பினர்கள், சமூக சுயஉதவிக் குழு பயிற்றுனர்கள், சமுதாய வள பயிற்றுனர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் அனைத்து சமுதாயம் சார்ந்த அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

சமத்துவ பொங்கல்

அனைத்து சமத்துவபுரங்களிலும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட வேண்டும். மக்கள் அனைவரும் சமூக வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கொருவர் அன்பையும், சமூக நல்லிணக்கத்தையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story