களை கட்டியது காணும் பொங்கல்: குடும்பத்தினருடன் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்
சென்னை மெரினா கடற்கரை, மாமல்லபுரம், வண்டலூர் பூங்காவில் நேற்று கூட்டம் அலைமோதியது. இதனால் காணும் பொங்கல் களை கட்டியது.
சென்னை,
தமிழ்நாட்டில் காணும் பொங்கல் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுவாக காணும் பொங்கல் தினத்தன்று மக்கள் கடற்கரைகள், சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு இடங்களுக்கு குடும்பத்துடன் சென்று கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் காணும் பொங்கலை சென்னை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு...
கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள், கடற்கரைகளில் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு (2022) கொரோனா தொற்று குறைந்து வந்த நேரத்திலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, கடந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையில் காணும் பொங்கல் வந்ததால், மக்கள் வெளியில் செல்ல தடை இருந்தது. இப்படியாக கடந்த 2 ஆண்டுகளாக காணும் பொங்கல் களை இழந்து இருந்தது. கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்துவிட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, காணும் பொங்கல் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் களை கட்டியது.
சென்னை உள்பட சுற்றுலா தலங்கள் இருக்கும் பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த பகுதிகள் முழுவதும் திருவிழா கோலம் பூண்டு இருந்தது.
மெரினா கடற்கரை
சென்னையில் மெரினா கடற்கரைப் பகுதிகளில் காலையில் இருந்தே சாரை, சாரையாய் மக்கள் வரத் தொடங்கினார்கள். மாலையில் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தது. குடும்பத்துடன் வருபவர்கள் குழந்தைகளை தவறவிட்டால், உடனடியாக மீட்பதற்காக அடையாள அட்டை குழந்தைகளின் கைகளில் கட்டப்பட்டன. அந்த வகையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையில் 11 உதவி காவல் மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதுதவிர, 15 தற்காலிக உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, அதிலும் போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு குதிரைப்படை வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடற்கரை மணற்பரப்பில் இருந்த கடைகளை சுற்றிப் பார்த்தும், அங்கிருந்த உணவகங்களில் சாப்பிட்டும், ராட்டினங்களில் விளையாடியும் மக்கள் மகிழ்ந்தனர். சிலர் வீட்டில் இருந்து உணவை சமைத்துக் கொண்டு வந்து அங்கு வட்டமாக அமர்ந்து சாப்பிட்டதையும் பார்க்க முடிந்தது. அங்குள்ள கலங்கரை விளக்கத்தை பார்வையிடவும் பலர் திரண்டனர்.
பெசன்ட் நகர்...
இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, 4 தற்காலிக உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டனர். அங்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
3-வது கண் என்று அழைக்கப்படும், டிரோன் கேமராக்களை கொண்டும் சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அந்த வகையில் மொத்தம் 6 டிரோன் கேமராக்களை கொண்டு கண்காணித்தனர்.
இதுதவிர, திருவான்மியூர், நீலாங்கரை போன்ற கடற்கரைப் பகுதிகளிலும் காணும் பொங்கலையொட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து பொழுதை கழித்தனர். கடற்கரை மணற்பரப்பில் வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்களை கவரும் விதத்திலும் மரத்திலான 11 யானை சிற்பங்கள் தத்ரூபமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது அங்கு வந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
கிண்டி சிறுவர் பூங்கா
மேலும், சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு காலையில் இருந்து வேன், கார், மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள். நுழைவுக் கட்டணத்தை பெற்று உள்ளே சென்றவர்கள், தங்கள் குழந்தைகளை அங்கிருந்த ஊஞ்சல்கள், சறுக்கல்கள் ஆகியவற்றில் ஏற்றிவிட்டு மகிழ்ந்தனர்.
வயதை மறந்து, பெரியவர்கள் கூட விளையாட்டு உபகரணங்களில் ஏறி விளையாடினர். அதனைத் தொடர்ந்து சிறுவர் பூங்காக்களில் இருந்த வன உயிரினங்களையும், பறவைகளையும் கண்டு ரசித்தனர். பிற்பகல் நேரத்தில் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள், மரங்களின் நிழலில் அமர்ந்து, இளைப்பாறி, தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை சாப்பிட்டனர்.
வண்டலூர் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் படையெடுத்தனர். வழக்கமாக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை விடப்படும். ஆனால் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் வந்ததால், பொதுமக்கள் வருவதற்கு ஏதுவாக நேற்று திறக்கப்பட்டு இருந்தது.
கூட்டம் அதிகம் இருந்ததால், பொதுமக்களின் வசதிக்காக நுழைவுக் கட்டணம் பெற 20 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு இருந்தன. காலையில் இருந்து மாலை வரை கூட்டம், கூட்டமாக வந்த மக்கள் பூங்காவில் புலி, சிங்கம், யானை, குரங்குகள் உள்பட வன விலங்குகளை கண்டு மகிழ்ந்தனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வனத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர். இங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொருட்காட்சி, புத்தக காட்சி
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் தீவுத்திடலில் பொருட்காட்சியும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக காட்சியும் நடைபெறும். அந்த வகையில் தற்போது நடைபெற்றும் வரும் பொருட்காட்சி, புத்தக காட்சியிலும் நேற்று மக்கள் கூட்டம் திரளாக இருந்தது. வழக்கத்தைவிட அதிகமானோர் வந்திருந்தனர்.
அதிலும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டு இருந்த சுற்றுலா பொருட்காட்சியில் பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து, பொழுதை கழித்து மகிழ்ந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த ராட்டினங்கள் உள்பட விளையாட்டு சாதனங்களில் ஏறி குதூகலம் அடைந்தனர்.
கோவில்களில் கூட்டம்
அதுமட்டுமல்லாமல், சென்னையை அடுத்த வேடத்தாங்கல் பறவைகள் சரணாலயம், மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிகளிலும் ஏராளமானோர் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. கடற்கரை, சுற்றுலா தலங்களை போலவே கோவில்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசாரும், கூடுதலாக 1,000 ஊர்க்காவல் படை வீரர்களும் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து கடற்கரைகள், பூங்காக்கள், பொருட்காட்சி, புத்தக காட்சி ஆகியவற்றுக்கு மக்கள் எளிதாக சென்று வருவதற்கு ஏதுவாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
5 லட்சம் பேர் திரண்டனர்
வழக்கமாக காணும் பொங்கலையொட்டி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களில் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் மக்கள் கூடுவார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு காணும் பொங்கல் இந்த ஆண்டு களை கட்டியிருக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரையில் மக்கள் திரண்டதாக தகவல்கள் தெரிவித்தன. அதில் சென்னை மெரினாவில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதாக கூறப்படுகிறது.