வீடு, வீடாக பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
உடுமலை பகுதியில் வீடு,வீடாக பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
பரிசுத் தொகுப்பு
கடந்த சில ஆண்டுகளாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000-த்துடன், முழுக் கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படவுள்ளது.
வரும் 9-ந்தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ள நிலையில் அதே நாளில் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படவுள்ளது.மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் கடந்த ஆண்டுகளைப் போல டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் உடுமலை தாலுகாவில் உள்ள 183 ரேஷன் கடைகளிலும் உள்ள பணியாளர்கள் மூலம் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணிகள் நேற்று தொடங்கியது.அதன்படி ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 991 ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படவுள்ளது.
வழக்கமான பொருட்கள்
தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களின் விவரம் மற்றும் கடை எண், பொருள் வாங்க வேண்டிய நாள் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. கணக்கம்பாளையம், பெரியகோட்டை ஊராட்சிகளில் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்றது.
சூழ்நிலையைப் பொறுத்து அரை நாள் டோக்கன் வழங்கி விட்டு வழக்கமான அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்கவும், அல்லது ஒருசில தினங்களில் டோக்கன் வினியோகத்தை முடித்து விட்டு வழக்கமான பொருட்களை தடையில்லாமல் வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக உடுமலை குடிமைப்பொருள் தாசில்தார் கார்த்திகேயன் தெரிவித்தார்.