விளைநிலங்களில் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எட்டயபுரம் அருகே விளைநிலங்களில் விவசாயிகளின் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
எட்டயபுரம்:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எட்டயபுரம் அருகே விளைநிலங்களில் விவசாயிகளின் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சி
தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1-ந்தேதியை முன்னிட்டு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் விவசாயிகள் பொன்னேர் பூட்டும் நிகழ்ச்சியை நடத்தினர். நல்ல மழை பெய்து, இருபோகம் விளைந்து, நீர்நிலைகள் பெருகி, மகசூல் செழித்து, அனைத்து உயிர்களுக்கும் உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விளைந்த மகசூலுக்கு உரிய விலை கிடைத்திடவும், கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைத்திடவும், விவசாய பணியின் போது இயற்கை இடர்பாடுகள் இல்லாமல் இருக்கவும் ஊர் பொது கோவில் நிலங்களில் அனைத்து டிராக்டர்களும் கிழக்கு நோக்கி வன்னிமரத்தடியில் நிறுத்தப்பட்டு வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விதை வித்துக்கள், விவசாய கருவிகள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்தனர்.
பின்னர் டிராக்டர்களுக்கு தீபாராதனை காண்பித்து சூரியனை வழிபட்டனர். சிந்தலக்கரை கிராம கமிட்டி தலைவர் சுப்பையா தலைமையில் பொன்னேர் எனப்படும் நாளேர் பூட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உழவு செய்துவிட்டு வீடு திரும்பிய ஆண்களுக்கு ஆரத்தி எடுத்து பானக்காரம் கொடுக்கப்பட்டது. விழாவில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மேல ஈரால்
எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈரால் கிராமத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகள் வயலில் உழுது பூமித்தாயை வணங்கி சிறப்பு பூஜைகள் நடந்தது. தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவண கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆத்தி ராஜ், ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு தலைவர் ராம்கி, எட்டயபுரம் மண்டல விவசாய அணி ஒன்றிய தலைவர் செல்வகுமார், எட்டயபுரம் மண்டல் ஒன்றிய தலைவர் சரவணகுமார், நாகராஜன், ஹரிஹரசுதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.