பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது


பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது
x

பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

தஞ்சாவூர்

பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்று தஞ்சையில், நடிகர் பார்த்திபன் கூறினார்.

தஞ்சையில், நடிகர் பார்த்திபன்

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தஞ்சையில் ஜி.வி. தியேட்டரில் வெளியான இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் காலை 8 மணிக்கு வந்தார். அவர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தார்.

பின்னர் அங்கிருந்து தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வந்தார். அங்கு அவருக்கு மேள, தாளம், கரகாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியகோவிலில் தரிசனம்

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கந்தசாமி மற்றும் பல்வேறு அமைப்புகள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலுக்கு சென்று நடிகர் பார்த்திபன் சாமி தரிசனம் செய்தார். அப்போது திரண்டு வந்த ரசிகர்கள், பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு 'செல்பி' எடுத்தனர்.

பின்னர் பார்த்திபன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருமையாக கருதுகிறேன்

நான் தஞ்சைக்கு பலமுறை வந்துள்ளேன். தற்போது வந்துள்ளது மிகப்பெரிய சந்தோசத்தை அளித்துள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் பெருமைகளை சொல்லி மாளாது. ராஜராஜன் செய்த சாதனைகள் என்றைக்கும் நிலைத்து இருக்கும். கல்கி கற்பனையாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கி பார்ப்பது என்பது பெரிய விஷயம்.

இதில் பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் பாராட்டும் வகையில் நடித்துள்ளனர். அந்த வகையில் எனக்கும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் பெருமையாக கருதுகிறேன். இரவின் நிழல் படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்டால் அது எனக்கு மிகவும் சந்தோஷம். இதன் மூலம் இன்னும் நல்ல படங்களை அளிப்பேன்.

மிகப்பெரிய வரவேற்பு

சினிமாவையும், ரசிகர்களையும் நான் பெரிதும் மதிக்கிறேன். காலை 4.30 மணி முதலே பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கிறார்கள். அது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் படம் வெளியான நிலையில் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதே மிகப்பெரிய வரவேற்பு தான்.

நடிகர்களை, மக்கள் நடிகர்களாக பார்ப்பது இல்லை. அந்த வகையில் எம்.ஜி.ஆரை மக்கள் நடிகராக பார்க்காமல், அவர் திரைப்படங்களில் எவ்வாறு நடித்தாரோ, அவ்வாறே ரசிகர்கள் பார்த்தனர். அது தான் இன்னும் அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கிக்கு காரணம். நானும் சினிமாவில் ரசிகர்களைத்தான் சம்பாதித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story