ஆழ்கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்


ஆழ்கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முடிகிறது. இதையொட்டி குளச்சலில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முடிகிறது. இதையொட்டி குளச்சலில் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

மீன்பிடிக்க தடை

மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க மத்திய அரசு 61 நாட்கள் தடை விதித்துள்ளது. அதன்படி குமரி கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிராமத்தில் ஜூன் 1-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

இந்த ஆண்டு குமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் ஜூன் 1-ந் தேதி முதல் தடைக்காலம் தொடங்கியது. இதையொட்டி குளச்சல் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பி மீன் பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து வந்தனர்.

இன்று நள்ளிரவு முடிகிறது

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முடிகிறது. இதனை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 3 நாட்களாக விசைப்படகுகளில் ஐஸ் நிரப்பும் பணி, குடிநீர் ஏற்றும் பணி நடந்து வருகிறது. ஆழ்கடல் பகுதியில் தங்கி மீன் பிடிக்கும் விசைப்படகினர் சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், பழவகைகள் போன்ற உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் குளச்சலில் முக்கிய கடைகளில் வியாபாரம் களைக்கட்டி உள்ளது. மேலும் மீன்பிடி தொழிலாளர்கள் மீண்டும் குளச்சலுக்கு வந்து தங்களது வழக்கமான பணியை தொடங்கி உள்ளனர்.

குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் கடலுக்கு செல்ல தயாராக நின்ற விசைப்படகுகளை அருட்பணியாளர் ஷாஜன் ஜெபம் செய்து அர்ச்சித்தார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் செய்திருந்தது.

2 மாதங்களுக்கு பின் விசைப்படகுகள் மீண்டும் கடலுக்கு செல்வதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.


Next Story