கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் புதுக்குளம்
கம்பத்தில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள புதுக்குளத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, தட்டைப்பயறு, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி நிலங்களின் பாசன ஆதாரமாக பல்வேறு குளங்கள் உள்ளன. தற்போது அந்த குளங்கள் மற்றும் அதற்கு தண்ணீர் வருகிற ஓடைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன.
குறிப்பாக கம்பம் பகுதியின் முக்கிய பாசன ஆதாரமாக விளங்கும் புதுக்குளத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் தற்போது குளம் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் போய்விட்டது. குளத்துக்கு தண்ணீர் வருகிற ஓடைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மழைக்காலத்தில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
தண்ணீர் இல்லாததால், விளைநிலங்கள் விண்ணை பார்த்து கொண்டிருக்கின்றன. விவசாயம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள புதுக்குளம் மற்றும் ஓடைகளை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.