பூம்புகாா் கல்லூாி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூம்புகாா் கல்லூாி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
திருவெண்காடு:
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பூம்புகாரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இது குறித்த தகவல் அறிந்த பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் -இன்ஸ்பெக்டர் சேதுபதி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கல்லூரி வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.