மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாகன பிரசாரம்- பேரணி
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகன பிரசாரம் மற்றும் பேரணி தொடங்கியது. இவற்றை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி குறித்து பொதுமக்களிடையே எடுத்துக் கூறப்பட உள்ளது.
பெண் குழந்தை பிறப்பு
குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும், 1000 ஆண் குழந்தைகளுக்கு 963 பெண் குழந்தைகள் தான் பிறக்கிறது என்று சுகாதாரத்துறை புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்ந்து ஒவ்வொரு குடும்ப பெரியவர்களும் பெண் குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிப்பதோடு, பெண் சிசுக் கொலையை தடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எல்.பி. உயர்நிலைப்பள்ளி, வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம் வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முடிவடைந்தது.
இதில் அரசு, ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவ, மாணவிகள், மாவட்ட மருத்துவ அதிகாரிகள், பணியாளர்கள், கிராம இசை கலைஞர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உறுதிமொழி
முன்னதாக குடும்ப கட்டுப்பாடு விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகள் வெளியிடப்பட்டது. மேலும் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை டீன் திருவாசகமணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) கற்பகம், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி டீன் கிளாரன்ஸ் டேவி, மருத்துவம் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் (பொறுப்பு) கற்பகவல்லி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர்கள் ரமேஷ், கிங்ஸ்லி கிறிஸ்டோபர், செல்வகுமார், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-------