ரேஷன் கடை ஊழியரை மாற்றாவிட்டால் போராட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவினாசி அருகே ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை மற்றும் சில பொருட்கள் வழங்குகிறார்கள். ரேஷன் பொருட்களின் எடையை குறைத்து வினியோகம் செய்யப்படுகிறது. பாமாயில் பாதி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே வினியோகம் செய்கிறார்கள். மீதம் உள்ளவர்களுக்கு பாமாயில் வரவில்லை என்று கடை ஊழியர் கூறிவிடுகிறார். இதுபோல் சர்க்கரையும் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
ரேஷன் பொருட்களை வெளிநபர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இதுகுறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினரிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ரேஷன் கடை ஊழியர் தனது கணவருடன் வந்து பணியாற்றுகிறார். அவரை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம்' என்று கூறியுள்ளனர்.