அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
குண்டடத்தை அடுத்த ராசிபாளையத்தில் அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் சிறைபிடிப்பு
தாராபுரம், சூரியநல்லூர், ராசிபாளையம், தம்புரெட்டிபாளையம், தாயம்பாளையம் வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் தினமும் செல்லக்கூடிய 7-ம் நம்பர் அரசு பஸ் சரிவர வராததை கண்டித்து பொதுமக்கள் மற்றும் 100 நாள் பணியாளர்கள் ராசிபாளையம் பகுதியில் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் பஸ் மூலமாக தாயம்பாளையம் அரசு பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ-மாணவிகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லக்கூடிய நோயாளிகளும் மற்றும் இந்த கிராம பகுதிகளில் இருந்து நகரத்திற்கு செல்ல கூடியவர்களும் இந்த ஒரு பஸ்சை நம்பித்தான்பயணிக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை
ஆனால் இந்த பஸ் சரிவர வராததால் ஆவேசமடைந்த ெபாதுமக்கள் இந்த பஸ்சை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி அந்த வழியாக வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
இது பற்றிய தகவல் அறிந்த ஊதியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜன், தாராபுரம் அரசு பஸ் கிளை மேலாளர் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் தினமும் உரிய முறையில் பஸ் இயக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்