முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் கொடைக்கானல் தாலுகா பெரும்பாறையில் செயல்படும் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (தமிழ், தாவரவியல் அல்லது விலங்கியல்) காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி ஆசிரியர் ஆகியோரை கொண்ட குழுவினர் காலிப்பணியிடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள். ஆசிரியர்கள் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கலை மற்றும் அறிவியல் பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள், கல்வியியல் பட்டம் பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள், பள்ளி அருகில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருப்பமுள்ள ஆசிரியர்கள், உரிய கல்விச்சான்றுகளுடன் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அடுத்த மாதம் (அக்டோபர்) 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.