அஞ்சல்துறை-ரெயில்வே இணைந்து அதிவிரைவு பார்சல் சேவை
இந்திய அஞ்சல்துறை- ரெயில்வே துறை இணைந்து அதிவிரைவு பார்சல் சேவையை வழங்குவதாகவும், இதனை தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறை- ரெயில்வே துறை இணைந்து அதிவிரைவு பார்சல் சேவையை வழங்குவதாகவும், இதனை தொழில்முனைவோர்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவு பார்சல் சேவை
திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் கோவிந்தராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல்துறை மற்றும் இந்திய ரெயில்வே துறை இணைந்து ரெயில் அஞ்சல் அதிவிரைவு பார்சல் சேவையை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2022-23 பட்ஜெட் அறிவிப்பின்படி, இரு துறைகளும் இணைந்து சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தயாரிப்பு மற்றும் திறமையான தளவாட சேவைகளை மேம்படுத்தி பார்சல்களை அனுப்புவதற்கு தடையற்ற தீர்வினை வழங்க இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, வாடிக்கையாளர்களின் இருப்பிடத்தில் இருந்து அஞ்சலகங்கள் மூலம் பார்சல்கள் பெறப்பட்டு, ரெயில்வே பார்சல் சேவை மூலம் உரிய இடத்தில் நேரடியாக அஞ்சலகத்தின் மூலம் விரைந்து பட்டுவாடா செய்யப்படுகிறது. அதிக தொலைவிற்கும்கூட, குறைந்த செலவில் மொத்தமாக பார்சல்களை அனுப்பும் நோக்கில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. அனுப்பும் பொருட்களின் மதிப்பிற்கு தகுந்த காப்பீட்டு வசதியும் உள்ளது.
சிறப்பு சரக்கு ரெயில்கள்
அனுப்பும் பார்சல்கள் ரெயில் மூலம் பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் சென்றடைகிறது. இந்த திட்டத்தின் முதல் சேவை, கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி சூரத்தில் இருந்து வாரணாசிக்கு தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு அஞ்சல் வட்டங்கள் ரெயில்வே துறையுடன் இணைந்து இந்த சேவையை சிறப்பாக வழங்கி வருகிறது.
தமிழ்நாடு வட்டத்தின் முதல் பார்சல் சென்னையில் இருந்து திருச்சி, திருமானூருக்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு, உரிய நேரத்தில் வாடிக்கையாளருக்கு பட்டுவாடா செய்யப்பட்டது. மேலும், இந்த பார்சல் சேவையை மேம்படுத்த சிறப்பு சரக்கு ரெயில்கள் கடந்த 16-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு
கடந்த 22-ந் தேதி கூடல் நகரில் இருந்து சங்க்ரெயில் (மேற்கு வங்காளம்) தடத்திற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு ஜெபிபி ரெயில் சேவையின் முதல் பார்சலை திருச்சி மத்திய மண்டல தலைவர் அய்யாக்கண்ணு கோவிந்தராஜன் மற்றும் முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மத்திய மண்டல இயக்குனர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்போது திருச்சியில் இருந்து சென்னை வழியாக கான்பூருக்கு 1.6 டன் எடை கொண்ட பார்சல் இந்த சேவையின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே தொழில் முனைவோர்களும் பொதுமக்களும் இந்த கூட்டு பார்சல் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.