அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய மண்டல அஞ்சல்துறை சாா்பில் நேற்று காலை திருச்சியில் அஞ்சல் ஊழியர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் புத்தூர் மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் "இல்லங்கள் தோறும் கொடி பறக்கட்டும் எட்டுத்திக்கும் நம் நாட்டின் புகழ் பரவட்டும்", "முனைப்புடனே ஏற்றிடுவோம் மூவர்ண கொடியினை மூன்று நாட்களுமே" போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். ஊர்வலத்தை மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். முதுநிலை கண்காணிப்பாளர் (ரெயில்வே மெயில் சர்வீஸ்) கணபதி சுவாமிநாதன், திருச்சி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய மண்டல அலுவலக உதவி இயக்குனர்கள், திருச்சி தலைமை அஞ்சலக சீனியர் போஸ்ட் மாஸ்டர் மற்றும் அஞ்சலக அலுவலர்கள், எழுத்தர்கள், தபால்காரர்கள், மெயில் கார்டு, பன்முகத்திறன் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.