முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி: அண்ணாமலையின் உதவியாளர் கைது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி: அண்ணாமலையின் உதவியாளர் கைது
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

வடசென்னை பகுதிகளில் கடந்த 11-ந் தேதி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இது குறித்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி என்ஜினீயர் ராஜ்குமார், சுவரொட்டியை ஒட்டிய பிலிப்ராஜ் என்பவரை பிடித்து விசாரித்தார்.

இதுபோல் முதல்-அமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என எச்சரித்தார். ஆனால் அதையும் மீறி சுவரொட்டியை ஒட்டியதால் இதுபற்றி எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தார். இதுபற்றி துறைமுகம் கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் ராஜசேகரும் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சுவரொட்டி ஒட்டிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிலிப்ராஜ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் மற்றும் இதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவருக்கு சத்தியநாதன் என்பவர்தான் அந்த சுவரொட்டிகளை கொடுத்தது தெரிந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், சிவகாசியில் உள்ள தனியார் அச்சகத்தில் 5 ஆயிரம் சுவரொட்டிகளை அச்சடித்து கூரியர் தபால் மூலம் சென்னை கொண்டு வந்து, பிலிப்ராஜை வைத்து சென்னையில் ஒட்டியது தெரியவந்தது.

உதவியாளர் கைது

போலீசாரின் தொடர் விசாரணையில் இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் (வயது 41) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் பிலிப்ராஜ், சத்தியநாதன் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரையும் நேற்று கைது செய்தனர்.

கைதான கிருஷ்ணகுமார் அடையாறில் அரசியல் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில், மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என எஸ்பிளனேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story