சிலம்ப வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டி ஒத்திவைப்பு
நடுவர்களை மாற்றக்கோரி சிலம்ப வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
கடலூா்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் முதல் நாளான நேற்று சிலம்ப போட்டிகளும் இடம் பெற்றிருந்தது. போட்டி தொடங்கிய போதே சிலம்ப போட்டியில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், நடுவர்களை மாற்ற வேண்டும் என்றும் பயிற்சியாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கைகளை சிலம்ப வீரர்கள் சிலரும் வலியுறுத்தினர். இதற்கு மத்தியிலும் போட்டிகள் தொடங்கியது. உடனே சிலம்ப வீரர்கள் போட்டியை நடத்த விடாமல் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சில வீரர்களும், பயிற்சியாளர்களும் கடைசி வரை ஒரே விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். எனவே சிலம்ப போட்டிகளை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தார். இதையடுத்து சிலம்ப வீரர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.