தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
ஊட்டியில் ஊதிய உயர்வு வழங்க கோரி தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் 27 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் ஊதிய உயர்வு வழங்க கோரி தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் 27 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தொடர் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மரத்திடம் மனு அளிப்பது, குட்டையில் இறங்கி போராட்டம் என நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் நேற்று 27-வது நாளாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயங்கி விழுந்தனர்
இதற்கிடையில் நேற்று மேலும் 4 பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்டக்கலை இணை இயக்குனர் கருப்புசாமி, துணை இயக்குனர் ஷிப்லா மேரி, போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா, ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் போஜராஜன் கூறும்போது, ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதுகுறித்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. எங்களது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
(பாக்ஸ்)மயங்கி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
கடந்த 10-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது, உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கம்மாள் உள்பட 4 பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அங்கம்மாள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதனால் தோட்டக்கலைத்துறை தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடந்த 10-ந் தேதி மயங்கி விழுந்த மற்றொரு பெண்ணின் உடல்நிலையும் மோசமாக உள்ளது. இறந்த அங்கம்மாள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 8 ஆண்டுகளாக தொழிலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.