மண்பாண்ட தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், குலாலர் சங்கத்தினர் செயலாளர் அய்யப்பன் தலைமையில் நேற்று இரவில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை திடீர் முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு குளங்களில் மண் எடுக்க தென்காசி மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கியும், அனுமதி கடிதத்தை தர மறுக்கும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரை கண்டித்தும், உடனடியாக அனுமதி கடிதத்தை வழங்க வலியுறுத்தியும் இந்த முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து செயலாளர் அய்யப்பன் கூறுகையில், ''மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் அள்ளுவதற்கு அனுமதி கடிதம் வழங்கும் வரையிலும் கலைந்து செல்ல மாட்டோம். தொடர்ந்து போராடுவோம்'' என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி போலீஸ் கமிஷனர் விவேகானந்தன், பாளையங்ேகாட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.