சாலையோரம் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்


சாலையோரம் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM IST (Updated: 30 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் மக்களுக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி

குப்பைகளுக்கு தீ வைப்பு

தேனி நகரில் உள்ள சுப்பன் தெரு திட்டச்சாலை பிரதான திட்ட சாலைகளில் ஒன்றாக திகழ்கிறது. தேனி நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான மாற்று சாலையாக இந்த திட்ட சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலையில் பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நடந்து செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்வதற்கான இடமாகவும் இந்த சாலை பயன்படுத்தப்படுகிறது.

இந்த சாலையோரம் சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டன. தினமும் குப்பை தொட்டிகள் நிரம்பி வெளியே குவிந்திருக்கும் அளவுக்கு குப்பைகள் கொட்டப்பட்டன. பின்னர் குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன. இருப்பினும் அதே பகுதியில் தினமும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இங்கு கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இவ்வாறு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மருத்துவ கழிவுகளும் இங்கு அடிக்கடி கொட்டப்படுகின்றன.

இறைச்சி கழிவுகள்

டன் கணக்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், அங்கு குவியும் குப்பைகள் பெயரளவுக்கு மட்டுமே அகற்றப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சமீப காலமாக அப்பகுதியில் சிலர் கோழி இறைச்சி கடைகளில் வெளியேறும் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

ஏற்கனவே அப்பகுதியில் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகி மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றன. அங்கு இறைச்சி கழிவுகளும் கொட்டுவதால் தெரு நாய்கள் அவற்றை சாப்பிடுவதற்கு சண்டை போட்டு சாலையில் அங்கும் இங்கும் ஓடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள், குப்பைகளுக்கு தீ வைப்பவர்கள் மீதும் நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story