கோழிப்பண்ணை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடியாத்தம் அருகே கோழிப்பண்ணை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் ஒன்றியம் செம்பேடு ஊராட்சி, பங்கரிஷிகுப்பம் கிராமத்தில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கோழிப்பண்ணை நடத்தி வருகிறது. இங்கிருந்து குஞ்சு பொரிப்பதற்கான முட்டைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த பண்ணையில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு முத்தரப்பு பேச்சு வார்த்தையின்படி கடந்த சில ஆண்டுகளாக குறைந்தபட்ச கூலி வழங்கப்பட்டு வருகிறது.
உடன்படிக்கையின்படி புதிய கூலி வழங்க வேண்டி உள்ளது. ஆனால் புதிய கூலி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் புதிதாக அறிவித்த குறைந்தபட்ச கூலித் தொகையை சம்பளமாக வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள், கோழிப்பண்ணை நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் பழையக்கூலி அடிப்படையிலேயே சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது.
எனவே புதிய கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த பிரச்சினையில் வருவாய்த்துறை கவனம் செலுத்தி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.