2-வது நாளாக கொட்டி தீர்த்த மழை
திண்டுக்கல்லில் 2-வது நாளாக நேற்று மழை கொட்டி தீர்த்தது.
வெயிலை விரட்டிய மழை
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுட்டெரித்த வெயிலை விரட்டியடிக்கும் வகையில், நேற்று முன்தினம் மாலை சிறிதுநேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் சூரியன் உக்கிரம் தொடர்ந்தது. பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரத்தில் மக்கள் வியர்வை குளியல் போடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
பின்னர் மாலை 4 மணிக்கு மேல் வானில் கருமேக கூட்டங்கள் திடீரென திரண்டன. ஆனால் மழை பெய்யவில்லை. மாலை 5.30 மணி அளவில் சாரல் மழையாக தொடங்கி சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.
கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் கொட்டி தீர்த்த மழையால் திண்டுக்கல் நாகல்நகர் ஆர்.எஸ்.சாலை, ஏ.எம்.சி.சாலை, பஸ் நிலைய பகுதி, திருச்சி சாலை, மதுரை சாலை உள்பட பல நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.
ஒருசில இடங்களில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் நீந்தியபடி வாகனங்கள் சென்றன. பகலில் ஏமாற்றினாலும் மாலையில் வருண பகவான் கருணை காட்டியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல் பழனி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மாலை 6 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு இரவு வரை மழை நீடித்தது. இந்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து, இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவியது.