நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்
திருவெறும்பூர் அருகே சம்பா நெற்பயிர்களை புகையான்நோய் தாக்கி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூர் அருகே சம்பா நெற்பயிர்களை புகையான்நோய் தாக்கி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புகையான் நோய் தாக்குதல்
திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் வருவாய் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த பயிர்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு வரும் நிலையில் இருந்தன.இந்த நிலையில் இப்பயிர்களை புகையான் நோய் தாக்கி உள்ளது. அறுவடைக்கு தயாரான நிலையில் நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, இப்பகுதியில் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, புகையான் நோய் தாக்கியதால் விவசாயிகள் வேதனையின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
பருவம் தவறிபெய்த மழை
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சங்கிலி முத்து கூறும்போது, தற்போது பெய்த பருவம் தவறிய மழையினால் சம்பா நெற்பயிர்களை புகையான் நோய் கடுமையாக தாக்கி உள்ளது.
இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் நோய் தாக்கப்பட்டதால் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வேளாண்மை துறையினர் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கிட்டு உரிய இழப்பீடும், பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய காப்பீடு தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.