வருசநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
வருசநாடு, மயிலாடும்பாறை பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பெரியகுளம் மின்பகிர்மான செயற்பொறியாளர் பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வளர்ந்து வரும் மின்தேவையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட பெரியகுளம் கோட்டப் பராமரிப்பில் உள்ள கடமலைக்குண்டு உபமின் நிலையத்தில் ஆற்றல் மின்மாற்றியில் திறன் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதற்காக பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேலும் இரவு நேரங்களில் அனைத்து விவசாய மின் இணைப்புகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. அதன்படி, மயிலாடும்பாறை, தர்மராஜபுரம், வைகை நகர், சிங்கராஜபுரம், பூசனூத்து, வருசநாடு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, காமராஜபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 5-ந்தேதி காலை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இதேபோல், அருகவேலி, மந்திச்சுனை, மூலக்கடை, முத்தாலம்பாறை, தங்கம்மாள்புரம், நரியூத்து, செங்குளம், வாய்க்கால்பாறை, உப்புத்துறை, சிறப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று, நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும், நாளை மற்றும் வருகிற 5-ந்தேதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.